ஏழ்மையின் உணவு

26 September 2017

அஜய்

ஏழ்மையின் உணவு

அண்ணே கஞ்சி எடுத்து வந்திருக்கேன் வாங்கண்ணே என்று முத்து கூப்பிட 
இருடா வரேன் வயலுல தண்ணி பாயுதுல்ல அவ்வளவு தான் இரு தண்ணி இந்த பாத்திக்கு கட்டிட்டு வந்திடுறேன் என்று வேலாயுதம் கூற நான் பள்ளிக்கூடம் போகணும் நேரமாச்சு இதோ கஞ்சி இருக்குற தூக்கு போசிய புளியமரத்துல மாட்டிட்டு போறேன் எடுத்துக்கோங்க என்று புளிய மரத்தின் அருகில் செல்ல , 
இரு தம்பி வந்துட்டேன் என் இப்படி அவசரப்படுற நீ சாப்புட்டியா என்ன? 
இல்ல அண்ணே சாப்பிடல. 
அப்புறம் பசியோட பள்ளிக்கூடம் சென்று என்ன பண்ண போற.பசியோடபடிச்சா படிப்பு மனசுல நிக்குமா என்ன .இரு சாப்பிட்டே போகுவியாமா என்று தண்ணீர் வயலுக்கு பாய்ச்சி விட்டு பசி தாங்க முடியாமல் அரைகுறையாக கால்களில் இருந்த சேற்றை கழுவிவிட்டு உணவு உண்ண அமர்ந்தார் வேலாயுதம். 
என்ன டா முத்து இன்னைக்கும் உன் அண்ணி பழைய சோறு தான் கறைச்சி கொடுத்து விட்டிருக்காளா?. நாமெல்லாம் என்னைக்கு சுடு சோறு சாப்பிடறது என்று ஏக்கப்பெருமூச்சு விட்டார் வேலாயுதம்.முத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் திடிரென்று 
அண்ணே எப்ப அண்ணே இட்லி தோசை கிடைக்கும் ? 
டேய் இங்க சாப்பாட்டுக்கே வழியக் காணோமா இதுல இட்லி தோசை வேற. 
நமக்கெல்லாம் கலியும் கம்பும் பழைய கஞ்சியும் தான்.இட்லி தோசை வேணுமுன்னா படி டா படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போ 
அப்பவாச்சும் நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்குதானு பார்ப்போம்.சரி அண்ணே படிச்சிடலாம் படிச்சு நல்ல வேலைக்கு போயி நல்ல சம்பாதித்து தினமும் இட்லி தோசை யே சாப்பிடாலாம் அண்ணே கவலை படாத. 
டேய் இட்லி தோசையே சாப்பிட்டாலும் இந்த பழைய சோறும் பச்சை மிளகாய் மாதிரி தேவமிர்மதே இருக்காதுடா புரிஞ்சுதா 
புரிஞ்சுது அண்ணே. என்ன அண்ணே சேறு அப்படியே இருக்கு. ஒழுங்கா கை கால் கழுவ மாட்ட எப்படி சாப்படுவீங்க. 
விடுடா இந்த சேறு தான் உலகத்துக்கே சோறு போடுது அது கையல காலுல இருந்தா என்ன இல்லாட்டி என்ன? சரி இன்னைக்கு கஞ்சிக்கு என்ன கொடுத்து அனுப்பினா ஊறுகாயா? இல்ல வெங்காயமா? 
அண்ணே அண்ணி மோர்மிளகாய் கொடுத்துவிட்டாக. 
உன் அண்ணி செஞ்சாளா என்று ஆவலுடன் வேலாயுதம் கேட்க 
இல்ல அண்ணே பக்கத்து வீட்டு பார்வதி அக்கா கொடுத்தது. 
அதானே பாத்தேன் உன் அண்ணிக்கு இதெல்லாம் எங்க செய்ய தெரியுதுன்னு அவளுக்கு கஞ்சியவே ஒழுங்கா கறைக்க தெரியாது. 
நீங்க பேசுணது அண்ணிக்கு தேரிஞ்சது உங்களுக்கு இந்த ஒரு வாரம் குடிக்க தண்ணி கூட கிடைக்காது. 
அட போட உன் அண்ணி ய பார்த்தா என்ன பயமா நேரே வந்து நிக்க சொல்லு தைரியமா சொல்லுறேன் அவளுக்கு ஒழுங்கா சமைக்க தெரியாதுன்னு.வேலாயுதமும் முத்துவும் உணவு உண்டு விட்டு இளைப்பாற படுத்திருந்தனர்.என்ன டா தம்பி பள்ளிக்கூடம் நேரமாச்சுனு சொன்ன கிளம்புல.நேரமாச்சு டா கிளம்பு . 
அண்ணே இன்னைக்கு பள்ளிக்கூடமே இல்ல இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.எனக்கு பள்ளிக்கூடம் நேரமாச்சுனு சொன்னாத்தானே சீக்கிரம் சாப்பிட வருவீங்க அதான் அப்படி சொன்னேன். 
வரவர பொய் சொல்லி கத்துக்கிட்ட என்று வேலாயுதம் வாய் மேல் விரல் வைத்து நீ நல்ல தந்திரசாலி தான் பொழச்சிப்ப என்று அதிசியக்க 
உரையாடல் நீள அந்த புளிய மர நிழலில் எத்தனை சுகம் கண்டோமென முத்து பல வருடங்களுக்கு பிறகு எண்ணிப்பார்க்கின்றான்.அந்த தருணமும் பழைய கஞ்சியும் கிடைக்குமா என்று ஏங்குகிறான். வாழ்வில் எவ்வளவு முன்னேறினாலும் விதவிதமான உணவு உண்டாலும் பழைய சோறு பச்சை மிளகாய் போல் இல்லையென்று அண்ணன் கூரியதை எண்ணிப்பார்த்தான்