நவீன கருவி

26 September 2017

அஜய்

நவீன கருவி

நவீன

ஏன் பா, பதிமூனு வயசு பொண்ணுக்கு இந்த மொபைல் லாம் தேவையா? என்று அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்த மகனிடம் கேட்டார் சிவநேசன். அவன் மகள் பிரேமா வெகு நாளாக கேட்டு கொண்டிருந்தாள் என பிறந்த நாள் பரிசாக வாங்கி வந்தான் கணேசன். 
இந்த காலத்துல எல்லாரும் மொபைல் வச்சிருக்காங்க அப்பா. அதில் ஒன்னும் தப்பில்ல. என்றான் கணேசன். நான் இப்போ சொல்றது உங்களுக்கு புரியாது. என் பேச்சை யார் கேக்குறா இந்த வீட்ல என மறைந்த தன் மனைவி கல்பனாவை நினைத்த படியே தன் அறைக்குள் சென்றார். 
கணேசனின் மனைவி ராதா சமையல் அறையில் இருந்து வெளியே வந்தப்படியே இதுக்கு தான் இவரை முதியோர் இல்லம் சேருங்க ன்னா கேக்க மாட்டிக்கிறீங்க! எல்லாத்துலயும் குற்றம் கண்டுபுடிக்கிறது தான் வேலை. என்றாள். நீ வேற ஏண்டி சும்மா இதையே சொல்ற. அவர் இருக்கிறது நமக்கு எவ்ளோ ஒத்தாசையா இருக்கு. நம்ப ரெண்டு பேருமே வேலைக்கு போறோம். அதை புரிஞ்சிக்காம. .. சரி. எங்க நம்ப பொண்ணு பிரேமா?  
புதுசா மொபைல் வாங்கி குடுத்தீங்கல, அதை காட்றதுக்கு அவ பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கா.. என்றபடியே தன் வேலையை பார்க்க சென்றாள். 
சிவநேசன் ஒரு விவசாயி. இரண்டு வருடம் முன்பு மாரடைப்பால் மனைவி இறக்க, இவருக்கும், தண்ணி இல்லாத காரணத்தினால், விவசாயத்தை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட, மகனுடன் சென்னை வந்தார். ரேஷன் கடைக்கு செல்ல, கடைக்கு செல்ல என்று சிறு சிறு உதவிகள் செய்து வந்தார். அக்கம் பக்கம் எந்த ஆட்களும் பேசிக் கொள்வதில்லை. சென்னை வாழ்க்கை இயந்திர கதியாக போய்க் கொண்டிருந்தது அவருக்கு. 
பேத்தி பிரேமா என்றாள் மிக இஷ்டம். இந்த காலத்து இளசுகள் பெரியவர்கள் சொல்வதை எங்கே கேட்கிறார்கள். அதிலும் இந்த மொபைல் வந்ததிருலிருந்து யாரிடமும் பேசுவதே நின்று விட்டது. எந்நேரமும் மொபைலுடனே திரிவாள். 
ஒரு நாள் தாத்தா, இங்க உக்காருங்க, சிரிங்க கொஞ்சம் என்று அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள். என்ன மா திடீர்னு போட்டோ எடுக்கிற? என்றவரிடம், உங்க பிறந்த நாளாம் தாத்தா, அப்பா சொன்னாங்க. அதான் பேஸ்புக் ல உங்களுக்கு விஷ் பண்றேன். என்றாள். 
அட கருமமே. எதிரில் உக்காந்திருக்கும் என்னிடம் வாழ்த்துக்கள் சொல்லவில்லை, பேஸ்புக் ல சொல்றியா என்பதை கூட கவனிக்காமல், பாருங்க தாத்தா, எவ்ளோ லைக்ஸ் வந்திருக்கு என்று ஆனந்த பட்டுக் கொண்டிருந்தாள். 
என்னவோ மா. ஆனா போட்டோ லாம் அப்டி போட கூடாது. ரொம்ப பிரச்சனை ஆகிடும், என்று அறிவுரைத்தார். போங்க தாத்தா, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க என்று அலட்சியமாக பதில் சொன்னபடியே இப்போது வாட்சப்பில் சேட் செய்துக் கொண்டிருந்தாள். 
ஈஸ்வரா, என் பேத்திய்ய காப்பாத்து என்றபடியே எழுந்து சென்றார். 
ஒரு நாள் மொபைலும் தொடவில்லை, மிக பதைப்போடு உட்காந்திருந்தாள். என்னம்மா, ஏன் இப்டி உக்காந்திருக்க என்று கேட்டது தான் போதும், அழ ஆரம்பித்து விட்டாள். மருமகள் ராதாவும் கணேசனும் பார்ட்டி என்று வெளியே சென்றிந்தார்கள். 
அழாத மா, என்னாச்சி ன்னு சொல்லு. தாத்தா நான் இருக்கேன் ல்ல என ஆறுதல் கூறினார். கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், சொல்ல ஆரம்பித்தாள். 
தெரியாத எண்ணிலிருந்து அவளுக்கு வாட்சப்பில் மெசேஜ் வந்துள்ளது. ஆரம்பத்தில் சட்டை செய்யாதவள் போக போக ஆர்வம் மேலிட அவளும் சிறு சிறு மெசேஜ் அனுப்பினாள். பின்பு தான் தெரிய வந்தது, அது அவளுடன் படிக்கும் மாணவன் என்றும் அவளிடம் நேராக பேச சங்கோஜ பட்டுக்கொண்டு மெசேஜ் செய்துள்ளான் என்றும் தெரிய வந்துள்ளது. 
இவளும், தன் நண்பனாக கருதி பள்ளியிலும், வீட்டுக்கு வந்த பின்பு வாட்சப்பில் பேச ஆரம்பித்துள்ளார்கள். திடீர் என்று ஒரு நாள், நாம் விடுமுறை அன்று வெளியே மீட் செய்யலாம் என்று அழைத்துள்ளான். இவளோ மறுத்திருக்காள். வெளியே செல்வதென்றால், எல்லா நண்பர்களுடன் தான் செல்ல வேண்டும், தனியாக வர முடியாது என பல முறை மறுத்திருக்காள். 
ஒரு கட்டத்தில், அவன் அவள் அனுப்பிய மெசஜை பள்ளியில் எல்லோருடனும் காட்டி விடுவேன் என்றும், வராவிட்டால் அவளை பற்றி தவறாக சொல்வேன் என்று மிரட்டி உள்ளான். வேறு வழி இல்லாமல், இவள் நாளை சனி கிழமை, பார்க்கலாம் என்று ஒப்புக் கொண்டாள். 
சிறிது நேரம் யோசித்த சிவநேசன், ஒண்ணும் பயப்படாத மா, என்கிட்டே வெளிப்படையா இதை நீ சொன்னது ரொம்ப நல்லது. நீ கவலை படாத, நாளைக்கு நான் போறேன், இந்த விஷயத்தை நான் பாத்துக்கிறேன். இப்போதைக்கு அம்மா அப்பாவிடம் எதுவும் சொல்லிக்க வேணாம். சரியா? என்றார். 
என்னை மன்னிச்சிடுங்க தாத்தா, நீங்க சொன்னப்ப நான் கேக்கல. என்றவளை சமாதான படுத்தி தூங்க அனுப்பி வைத்தார். 
மறுநாள் அவரே சென்று அவனை சந்தித்தார். தம்பி, உனக்கு தங்கை இருக்கிறாள், அவளுக்கும் இதே நிலைமை வந்தால், என்ன செய்வாய். தவிர, பிரேமாவின் பெற்றோருக்கு தெரிந்தால், நீ இந்நேரம், ஜெயிலில் இருப்பாய். உன் வாழ்க்கை என்னாவது என்று பலவாறு அவனுக்கு பேசி புரிய வைத்தார். 
மறு நிமிடமே அவர் காலில் விழுந்து, சாரி தாத்தா , மொபைல் ல வர ஆபாச படங்களை பார்த்து தான் நான் இப்டி ஆனேன். இனிமே நான் இப்டி நடந்துக்க மாட்டேன். என்று மன்னிப்பு கேட்டு விட்டு நகர்ந்தான். 
விஷயம் தெரிந்த , கணேசனும் ராதாவும் சிவநேசனின் காலில் விழுந்தார்கள். ராதா இவரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் எண்ணத்தை நினைத்து வெட்கப்பட்டாள். 
மொபைல் என்பது கத்தி போன்றது. அதை கையாளும் விதத்தில் கையாண்டால் நன்மை, இல்லை என்றால் அது நம்மை தான் பதம் பார்க்கும். என்றார் சிவநேசன். பேத்தியும் இப்போதெல்லாம், பாட சந்தேகங்களுக்கு மொபைல் எடுப்பாளே தவிர பொழுது போக்கிற்காக தொடுவதில்லை.