புரிபவர்களுக்கு புரிந்துவிட்டால்

26 September 2017

அஜய்

புரிபவர்களுக்கு புரிந்துவிட்டால்

புரிபவர்களுக்கு

வீடு நிரம்ப கூட்டம் இருந்தாலும் வீடே அமைதியாய் இருந்தது. தானே உலகம் என்ற மத்தாப்பில் இருந்த நிரஞ்சன் ஆறடி கட்டிலில் சடலமாய் படுத்திருந்தான். 30 வயது ஆக இன்னும் இரண்டு மாதம் இருந்தது. அவனை சுற்றி வர கூட்டம் .. அது அன்பால் நிறைந்த கூட்டம் அல்ல, பார்வதி அம்மாளையும் அப்பாவி விநோதராவையும் பரிதாப கண்ணோடு அலசவே வந்திருந்தது மொத்த கூட்டமும். கணவனின் சாவு விநோதராவை பாதித்ததா இல்லையா என்பதை எவராலும் கணிக்க முடியாமல் இருந்தது. கண்ணில் நீர் மல்க தன் மாமியாரின் மடியில் தலை சாய்த்து விட்டத்தை நோக்கி கொண்டிருந்தாள் வினோ..வினோதரா. 25 வயதும் ஆகாத பச்சை பெண், இவள் விதவை ஆனது யார் குற்றம்? 
மகனின் கெட்ட குணத்தை மறைத்து பெண் கேட்டு சென்ற பார்வதி குற்றமா? விசாரிக்காது பெண் கொடுத்த வினோவின் தாய் குற்றமா? உண்மை தெரிந்த பின்னும் கணவனை திருத்த முடியும் என நம்பிய பேதையின் குற்றமா? இல்லை கடைசி காலத்தில் ஆட்டம் அடங்குவது புரிந்து திருந்திய நிரஞ்சன் குற்றமா? தப்பின் தண்டனையாய் வந்த புற்று நோயின் குற்றமா? யார் குற்றம் என்றாலும் இப்பபோதைக்கு மருமகளின் தலை கோதும் பார்வதியம்மாலே குற்றம் செய்துவிட்டோமே என்ற கவலையில் பெற்ற ஒரே மகனின் சாவுக்கு ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காமல் கல்லே உருவாக்கியிருந்தாள். 
நிரஞ்சனை நீராட்ட எடுத்து செல்லும் போது மனைவியின் விதவை சடங்கை செய்ய பெண் கூட்டம் பூவோடும் பட்டு சேலையோடும் வந்திருந்தது. வினோ குற்றம் செய்யாவிடின் என்ன? அவள் பெண்ணாய் பிறந்துவிட்ட ஒன்று போதாதா? விதவை கோலம் அவள் அவதரிக்க வேண்டியது கட்டாயம். மனிதன் சந்திரனுக்கு இல்லை சூரியனுக்கே சென்று வந்தாலும் மாற்ற முடியாத மூட கலாசாரம். 
என்னமா பார்வதி. ஓ மருமகளை சத்த உள்ள கூட்டிட்டு வாம்மா! சடங்குக்கு நேரமாச்சு. வயதான பாட்டியின் குரலில் விழுக்கென்று அமர்ந்தாள் வினோ. அச்சம் அவள் விழிகளில் தாண்டவமாடியது. பார்வதி நிதானமாய் மருமகளின் தலையை மீண்டும் மடியிலே கிடத்தினாள். 
என்ன பார்வதி? நீ என்ன சின்ன குழந்தையா? சடங்கு சம்ப்ரதாயம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணமே? பார்வதியை கண்டித்துவிட்டு வினோவின் கையை பிடித்து அவளை எழுப்ப முயன்றால் பக்கத்து வீட்டு பாட்டி. 
ஏ மருமகளுக்கு எந்த சடங்கும் தேவல்ல. உங்க சடங்கு சம்ப்ரதாயத்தால யாருக்கு என்ன பலன்? சடங்கு செய்றதால போன உயிர் திரும்பி வருமா இல்ல வினோ இனி முன்ன போல ஆடி ஓட இயலுமா? இன்னும் வாழவே தொடங்காத இந்த பெண்ண பொட்டலிச்சி பூவ அழிச்சி, வெள்ளை சேலை உடுத்த நான் விடமாட்டேன். அவ இந்த வீட்டுக்கு எப்படி வந்தாலோ அப்படி தான் அவ இருப்பா. என் பையன் கெட்ட காலம் குடியாலேயே அவன் மூழ்கிட்டான் அதுக்கு இந்த அப்பாவி பெண் என்ன செய்ய? பூவலிச்சி பொட்டலிச்சி அவளை மூலைல இருக்க அவ என்ன பாவம் பண்ணினா? நீங்களே சொல்லுங்க பாட்டிமா நானும் கணவனை இழந்து தவிக்குற நேரம் சடங்கு என்ற பேர்ல என்னையும் பொட்டலிச்சி பூவ அழிச்சி, வெள்ளை சேலை உடுக்க வெச்சிங்க? ஆசைக்கு ஏதாச்சும் நல்ல காரியத்துக்கு வந்தேனா ? சொந்த மகனுட கல்யாணத்தையே மூலைல இருந்து தானே நான் பார்த்தேன்? வீடே கதி எண்டு நான் இருந்ததால தான் இல்லாத கெட்ட பழக்கமெல்லாம் என் மகன் பழகி இன்னக்கி பாடைல போறான். அந்த நிலைமை வினோக்கு வரக்கூடாது. அவ சமுதாயத்துல ஒதுக்க பட வேண்டியவை இல்ல. இனி அவ என் மருமக இல்ல சொந்த மகள். அவளை பாதுகாக்கிறது ஏ கடமை. என்று வினோவை மாரோடு அணைத்தாள் பார்வதி. 
கெட்டது நடந்த வீட்ல நல்லது நடக்கனுமுனு சொல்வாங்க அடுத்த மாசமே ஏ மகளுக்கு கல்யாணம் முடிக்குறதா நான் முடிவெடுத்துட்டேன், இனி நடக்குறத பாருங்க என்று வினோவை தோளில் சாய்த்து கொண்டாள் பார்வதி.. 
அவள் சொன்னதில் பிழையில்லை என்பதை போல அமைதியாய் இருந்தது மக்கள் கூட்டம்.அவள் சொன்னதில் பிழையில்லை என்பதை போல அமைதியாய் இருந்தது மக்கள் கூட்டம்.