உலகையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமாக இந்திய வம்சாவளியினர் திகழ வேண்டும்: ஜிபூட்டி நாட்டில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

04 October 2017

அஜய்

உலகையும், இந்தியாவையும் இணைக்கும் பாலமாக இந்திய வம்சாவளி மக்கள் திகழ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக, ஜிபூட்டி நாட்டுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார். தலைநகர் ஜிபூட்டி சிட்டியில் உள்ள அந்நாட்டின் அதிபர் மாளிகையில் ராம்நாத் கோவிந்துக்கு புதன்கிழமை அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜிபூட்டி அதிபர் இஸ்மாயில் உமர் குல்லாவை ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். 
அப்போது, இந்தியா- ஜிபூட்டி இடையே கடலோரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, புதுப்பிக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர். உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் யேமனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வரும் ராவத் நடவடிக்கைக்கு ஜிபூட்டி செய்த உதவிகளுக்கு ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் நாட்டின் அப்போதைய அதிபர் பிரான்சிஸ் ஹோலாந்தும் இணைந்து தொடங்கி வைத்த சர்வதேச சூரியஒளி கூட்டணியில் உறுப்பினராவது தொடர்பான முடிவை செயல்படுத்தும்படி ஜிபூட்டியை கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியா-ஜிபூட்டி நாடுகளின் வெளியுறவுத் துறை அலுவலகங்கள் இடையே தொடர் ஆலோசனை நடத்துவது தொடர்பான அமைப்பை உருவாக்குவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதன்பின்னர், ஜிபூட்டியில் வாழும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியா-ஜிபூட்டி இடையே வரலாற்று காலம் தொட்டே தொடர்பு உள்ளது. அந்த காலம் முதலே, இருநாட்டு மக்களும் நேரிடையாக தொடர்பு வைத்துள்ளனர். இந்த வரலாறு, அடையாளத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க முயற்சிக்க வேண்டும். அதேபோல், இருநாடுகளின் பொதுவான பாரம்பரியத்துக்கு புத்துயிர் கொடுக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. நம்மை இணைக்கும் கடல் பகுதி வேண்டுமானால் இந்திய பெயரில் (இந்தியப் பெருங்கடலை குறிப்பிட்டார்) இருக்கலாம். ஆனால், அந்தக் கடலானது நம் அனைவருக்கும் சொந்தமானது ஆகும். அந்த கடல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மை ஒன்றாக இணைத்துவிட்டது.
ஜிபூட்டி நாடு, ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக ஜிபூட்டி திகழ்கிறது. யேமன் நாட்டில் 2015-ஆம் ஆண்டு குழப்பம் நேரிட்டபோது, அந்நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களையும், பிற நாட்டினரையும் பத்திரமாக மீட்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு ஜிபூட்டி ஆதரவாக இருந்தது. இதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு, நான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும். தற்செயலாக இந்த பயணம் அமைந்து விடவில்லை. நன்கு திட்டமிட்டபிறகுதான், இந்தப் பயணத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டத்துடனான இந்தியாவின் நட்புறவானது, எங்களது இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பிரிக்க முடியாத உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியானது, ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. இந்திய வம்சாவளி மக்கள், இந்தியாவையும், உலகையும் இணைக்கும் பாலமாக செயல்பட வேண்டும். இந்தியா தற்போது அதிக வளர்ச்சியடைந்து வரும் நாடாக உள்ளது. இந்தியாவில் வெற்றிக்கான நம்பிக்கையும், உறுதியும் உள்ளது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022-ஆம் ஆண்டில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய இந்தியாவின் எழுச்சியில், இந்திய வம்சாவளியினரும் கூட்டாளியாக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.