அமைதி, முன்னேற்றம், வளத்தின் உறைவிடமாக சார்க் நாடுகள் உருவாக வேண்டும்: இலங்கையில் சுமித்ரா மகாஜன் பேச்சு

04 October 2017

அஜய்

அமைதி, முன்னேற்றம், வளத்தின் உறைவிடமாக சார்க் நாடுகள் உருவாக வேண்டும்: இலங்கையில் சுமித்ரா மகாஜன் பேச்சு


அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றின் உறைவிடமாக உருவாக சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்கும் 8-ஆவது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் புதன்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பங்கேற்றுப் பேசியதாவது:
நீடித்த வளர்ச்சி லட்சியங்களை (எஸ்டிஜி) அமல்படுத்த சார்க் நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அப்போதுதான் அவற்றில் நாம் வெற்றியை அடைய முடியும். உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ள தெற்கு ஆசியாவில் இதற்கான கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
நீடித்த வளர்ச்சி லட்சியங்களின் உலகளாவிய வெற்றியானது சார்க் நாடுகளில் அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்துவதையே சார்ந்துள்ளது. ஏழைகளை அதிகாரம் பெறச் செய்வதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கான பணியை இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு, நீர்ப் பாதுகாப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் சிறந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனது சொந்த நகரான இந்தூர், இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் தன்னார்வப் பங்களிப்பு, ஒத்துழைப்பு, மக்கள் பிரதிநிதிகளின் ஆர்வமிக்க ஈடுபாடு ஆகியவற்றால்தான் சாத்தியமானது. ஆகவே, நீடித்த வளர்ச்சி லட்சியங்களை எட்டுவதற்கு ஒத்துழைப்பு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளின் சட்ட அமைப்புகளின் அனுபவங்களின் பரிமாற்றம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. அந்த வகையில், 2030-ஆம் ஆண்டுக்கான குறிக்கோளை முழு ஆர்வத்துடனும், உணர்வுடனும் இந்தியாவைச் சேர்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில், ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் எஸ்டிஜி குறித்து விவதாதிக்கவும், அவற்றை அமலாக்கவும் ஒரு நாளை அர்ப்பணிக்க இந்திய நாடாளுமன்றம் முடிவு செய்திருக்கிறது. ஆகவே, சார்க் நாடுகளை அமைதி, முன்னேற்றம், வளத்தின் உறைவிடமாக உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் சுமித்ரா மகாஜன்.