பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்தினால் இந்தியாவிடம் இருந்து பொருளாதார நன்மைகளை பாக். பெற முடியும்: அமெரிக்க அமைச்சர்

04 October 2017

அஜய்

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்தினால் இந்தியாவிடம் இருந்து பொருளாதார நன்மைகளை பாக். பெற முடியும்: அமெரிக்க அமைச்சர்


பயங்கரவாதிகளின் சொர்க்கபூமியாக திகழ்வதை பாகிஸ்தான் அடியோடு நிறுத்தினால், இந்தியாவிடம் இருந்து பொருளாதார பயன்கள் உள்பட பல்வேறு நன்மைகளைப் பெற முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் கூறினார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான், தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் கொள்கைகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார். அதில், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கொள்கை வகுக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரமிக்க ராணுவப் பணிகள் குழு உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதக் கூட்டத்தில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் பேசியதாவது:
பயங்கரவாதிகளின் சொர்க்கபூமியாக திகழ்வதை பாகிஸ்தான் அடியோடு நிறுத்திக் கொண்டால், அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவிடம் இருந்து பல்வேறு வலுவான நன்மைகளைப் பெற முடியும். பொருளாதார பயன்கள் மட்டுமன்றி, தூதரகரீதியிலும் பாகிஸ்தான் நன்மையடைய முடியும்.
பயங்கரவாத விவகாரத்தில், சர்வதேச அளவில் தனக்கு எதிரான அலை வீசுவதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும், தங்களது நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்திக் கொள்வதுடன், சர்வதேச அளவில் தனது பொறுப்புகளை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் ஒழிக்கப்படாத வரையில், ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி இந்தியா உள்பட தெற்கு ஆசிய நாடுகளில் நீடித்த நிலைத் தன்மையை பராமரிப்பது கடினமானது.
இந்த விவகாரத்தில், பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் உறுதியானவை, தெளிவானவை. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பாகிஸ்தானின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார் ஜிம் மேட்டிஸ்.
இதனிடையே, ராணுவப் பணிகள் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் மெக்கேன் பேசுகையில், அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் மீதான அமெரிக்க அரசின் அணுகுமுறை கடுமையானதாக மாற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். அதன்படி, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு என்னென்ன உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன? என்பது குறித்து அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.