காடலோனியாவுக்கு விடுதலை: ஸ்பெயின் மன்னர் நிராகரிப்பு

04 October 2017

அஜய்

காடலோனியாவுக்கு விடுதலை: ஸ்பெயின் மன்னர் நிராகரிப்பு


phlip

தொலைக்காட்சியில் உரையாற்றும் மன்னர் பிலிப்.

ஸ்பெயினில் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான காடலோனியாவை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அந்தப் பகுதி அரசின் கோரிக்கையை அந்த நாட்டு மன்னர் பிலிப் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:
தனி நாடு கோரி காடலோனியாவில் நடைபெற்றுள்ள பொது வாக்கெடுப்பு சட்ட விரோதமாகும். அந்த மாகாண அரசு, இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் காடலோனியா மட்டுமன்றி ஒட்டுமொத்த ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்துக்கும், சமூக நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் புறம்பாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள். மாகாண அரசுகள் நாட்டின் அரசியல் சாசனத்தை மதித்து நடக்க வேண்டியது அவற்றின் கடமையாகும் என்றார் அவர்.
இந்த விவாகரத்தில் இதுவரை பட்டும்படாமல் பேசி வந்த மன்னர், தற்போது காடலோனியா தனி நாடு கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது காடலோனியா. ஸ்பெயின் முடியாட்சியின் கீழ் உள்ள போதிலும் இது ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். அப்பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என ஒரு பிரிவினர் நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர். இதனை ஸ்பெயின் அரசரும் பிற தேசிய அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், காடலோனியா பகுதியைத் தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாகப் பொது வாக்கெடுப்பு நடத்த பிரிவினைவாத பிரதேச அரசு முடிவு செய்தது. 
இந்த முடிவைக் கடுமையாக கண்டித்த ஸ்பெயின் மத்திய அரசு, பொது வாக்கெடுப்புக்குத் தடை விதித்தது. மேலும், பல்வேறு நீதிமன்றங்களும் இந்தப் பொது வாக்கெடுப்பு, சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்தன.
எனினும், அரசின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி காடலோனியா பிரதேச அரசு, திட்டமிட்டபடி பொது வாக்கெடுப்பை ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடித்தது.
அதனைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், காடலோனியா அரசு ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.