ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போன ஹிட்லரின் உலக உருண்டை

04 October 2017

அஜய்

ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போன ஹிட்லரின் உலக உருண்டை


john

ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டையுடன், அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் ஜான் பார்ஸாமியன்.

ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை, அமெரிக்காவில் ரூ.42 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
ஜெர்மனியில் நாஜிக் கட்சியை தோற்றுவித்து, அந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி செலுத்தி வந்தவர் ஹிட்லர்.
இரண்டாம் உலகப் போரில் கடந்த 1945-ஆம் ஆண்டு ஜெர்மனி வீழ்ந்தபோது, பெர்ச்டெஸ்காடன் நகரில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் இருந்த ஹிட்லரின் மாளிகையை நேசப் படைகள் குண்டு வீசித் தகர்த்தன. அதனைத் தொடர்ந்து அந்த மாளிகையைப் பார்வையிட்ட ஜான் பார்ஸாமியன் என்ற அமெரிக்க வீரர், ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டையை இடிபாடுகளில் இருந்து வெற்றிப் பரிசாக எடுத்துக் கொண்டு, தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் லைவ் ஆக்ஷனியர்ஸ் நிறுவனம், அந்த உலக உருண்டையை 65,000 டாலருக்கு (சுமார் ரூ.42 லட்சம்) ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. 
முழுவதும் ஜெர்மனி மொழியில் நிலப்பரப்புகளின் பெயர்கள் குறிக்கப்பட்ட அந்த உலக உருண்டை மட்டுமன்றி, ஹிட்லர் பயன்படுத்திய மேற்சட்டையும் 10,000 டாலருக்கு (சுமார் ரூ.6.5 லட்சம்) ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.