ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் பாகிஸ்தான் நிதியமைச்சர் ஆஜர்

04 October 2017

அஜய்

ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் பாகிஸ்தான் நிதியமைச்சர் ஆஜர்


பனாமா ஆவண ஊழல் தொடர்பாக, பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அந்த நாட்டு நிதியமைச்சரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு நெருக்கமானவருமான இஷாக் தர் புதன்கிழமை ஆஜரானார்.
அவர் வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்ததாகக் கூறப்பும் குற்றச்சாட்டு தொடர்பாக இரு சாட்சியங்களை விசாரித்ததன் மூலம், இந்த வழக்கின் விசாரணை முறைப்படி தொடங்கிவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப், அவரது மகன் மற்றும் மகளுக்கு எதிராக நடைபெற்று வந்த பனாமா ஆவண வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து அவரை கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும், அவருக்கு நெருக்கமான நிதியமைச்சர் இஷாக் தருக்கு எதிராகவும் ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதையடுத்து, ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் நிதியமைச்சர் இஷாக் தர் மீது கடந்த மாதம் 27-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த திங்கள் கிழமை நவாஸ் ஷெரீஃப் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக இருந்த நிலையில், நவாஸைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட வேறு யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் மீதான குற்றச்சாட்டு பதிவை வரும் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 
எனினும், நீதிமன்றத்தில் ஆஜராக நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்தனர்.
புற்று நோய் சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலை தேறி வரும் நவாஸ் ஷெரீஃபின் மனைவிக்குத் துணையாக அவர்கள் இன்னும் லண்டனில் இருப்பதால், அவர்களுக்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்யும்படி நவாஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்த நிலையில், இஷாக் தரை நேரில் வரவழைத்து இந்த வழக்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் முறைப்படி தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.