திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும்

04 October 2017

அஜய்

திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும்


Ramanathan

அபிராமி ராமநாதன்


தமிழகம் முழுவதும் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
தமிழக அரசின் கேளிக்கை வரி குறித்த கூட்டு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரை அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
இந்தக் கூட்டத்துக்குப் பின் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
நாடு முழுவதும் ஒரே வரி என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில், மத்திய அரசின் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) ஏற்றுக் கொண்டோம். இதனிடையே தமிழக அரசு திரையரங்குகளுக்கு கூடுதலாக கேளிக்கை வரியை விதித்தது. நாங்கள் தொடர்ச்சியாக வைத்த கோரிக்கைகளையடுத்து 30 சதவீத வரி என்பது 10 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஆனால் தற்போது சினிமாத் துறை இருக்கும் சூழலில், 10 சதவீத வரியைக்கூட செலுத்த முடியாத நிலை உள்ளது. 
தற்போதும் எங்களுக்கு அரசின் மீது நம்பிக்கை உள்ளது. கேளிக்கை வரியை முழுமையாக தமிழக அரசு நீக்கும் என நம்புகிறோம். இதுகுறித்த கோரிக்கைகளை தொடர்ச்சியாக எழுப்புவோம். இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளோம். 
இந்தப் பிரச்னையால் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்காது என்ற சூழல் நிலவி வந்தது. ஆனால் வழக்கம்போல் திரையரங்குகள் இயங்கும் என்ற முடிவை எடுத்துள்ளோம் என்றார் அவர்.
இதுதொடர்பாக பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கேளிக்கை வரியை எதிர்த்து புதிய தமிழ்த் திரைப்படங்களை வெள்ளிக்கிழமை (அக்.6) முதல் வெளியிடுவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.