கேளிக்கை வரிக்கு எதிராக நாளை முதல் புதிய திரைப்படவெளியீடு நிறுத்தம்

04 October 2017

அஜய்

கேளிக்கை வரிக்கு எதிராக நாளை முதல் புதிய திரைப்படவெளியீடு நிறுத்தம்


தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை (அக்.6) முதல் புதுப்பட வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழ்த் திரைப்படத் துறை, ஏற்கெனவே திருட்டு விசிடி முதற்கொண்டு அண்மையில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
குழப்பம் ஏற்படுத்தும்... தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத் துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் எங்களது நிலைப்பாட்டை விளக்கியுள்ளோம். 
பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவுக் கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10 சதவீத கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. 
திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி கேளிக்கை வரியை தமிழ்ப் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வெள்ளிக்கிழமை (அக்.6) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.