ரியல் தந்தையுடன் ரீல் தந்தைக்கு விருந்தளித்த தோனி!

04 October 2017

அஜய்

ரியல் தந்தையுடன் ரீல் தந்தைக்கு விருந்தளித்த தோனி!


 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, திரைப்பட நடிகர் அனுபம் கேர் மற்றும் நடிகை சௌந்தர்ய ஷர்மா ஆகியோருக்கு தனது இல்லத்தில் விருந்தளித்தார்.

மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியானது தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படம். இதில் தோனியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியின் தந்தை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நடித்தார்கள்.

தமிழில் பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா ஆகியோர் நடிப்பில் வெளியான விஜபி என்ற திரைப்படம் அனைவரும் அறிந்ததுதான். அதில், சிம்ரனின் தந்தையாக நடித்தவர்தான் இந்த அனுபம் கேர். மேலும், உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் வரும் ஐஜி கதாபாத்திரத்தில் இந்தியில் நடித்தவர்.

இந்நிலையில், நடிகர் அனுபம் கேர் தயாரிப்பில் புதுமுக நாயகி சௌந்தர்யா ஷர்மா நடிப்பில் வெளியாகவுள்ள ராஞ்சி டைரீஸ் என்ற திரைப்படத்தின் விளம்பரத்துக்காக ராஞ்சி நகரில் முகாமிட்டுள்ளனர்.

ராஞ்சி, தோனியின் சொந்த ஊராகும். எனவே அவரது இல்லத்துக்குச் சென்ற இவர்கள் இருவருக்கும் தோனி விருந்தளித்து அசத்தினார். அதில், தனது தந்தையாக நடித்த அனுபம் கேர் மற்றும் தனது நிஜத் தந்தையான பான் சிங் தோனி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

மேலும், இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அனுபம் கேர் பகிர்ந்தார். தோனி, சாக்ஷி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தவர், தோனியின் மகள் ஸீவா ஒரு குறும்புக்கார குட்டி தேவதை என பதிவிட்டார்.

இந்த விருந்தில் கலந்துகொண்ட சௌந்தர்யா ஷர்மாவும் தோனியுடனான புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாடலாக இருந்த சௌந்தர்யாவுக்கு இதுவே முதல்படமாகும்.