தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள்: முதல்வருக்கு விஷால் வேண்டுகோள்!

04 October 2017

அஜய்

தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள்: முதல்வருக்கு விஷால் வேண்டுகோள்! 


 

சென்னை: கூடுதல் கேளிக்கை வரிவிதிப்பு முறையால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று  தமிழக முதல்வருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிஎஸ்டி  மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பு முறையின் காரணமாக அதிக அளவில் பொருளாதாரச் சுமை ஏற்படுவதாகக் கூறி, வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  விஷால் சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தமிழ் சினிமாவினைப் பொறுத்த வரை பல்வேறு விதமாக தயாரிப்புச் செலவு உயர்வு என மிகுந்த நெருக்கடியில் இருந்து வருகிறோம். இந்நிலையில் மத்திய அரசின் 28% ஜிஎஸ்டி வரியுடன், தமிழக அரசின்    மாற்றி அமைக்கப்பட்ட 10% கேளிக்கை வரி என்பது கூடுதல் சுமையாக அமைந்து விடும். இதன் காரணமாக நாங்கள் செயல்படவே இயலாத நிலை ஏற்பட்டு விடும்.

கர்நாடகா மற்றும் பெங்கால் உள்ளிட்ட பல மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியில் 10% மீண்டும் திரைத்துறைக்கே தள்ளுபடியாக தரப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இதுதான் நிலைமை. தமிழகமும் அது போல திரைத்துறைக்கு உதவும் என்று நினைக்கிறேன். கூடுதல் கேளிக்கை வரிவிதிப்பு முறையால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள்

எனவே பல்வேறு நெருக்கடிகளினிடையே வேறு வழி இல்லாமல், மிகுந்த வலியுடன்தான் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்ற முடிவை எடுத்துள்ளோம். ஏற்கனவே முதல்வரை சந்தித்து எங்கள் தரப்பினை விளக்கியுள்ளோம். நாளை மீண்டும் சந்திக்க உள்ளோம். நல்ல முடிவினை அரசு தரப்பிலிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.