புலமும், புலம்பெயரும்...

23 November 2017

kavijanillai@gmail.com


புலமும், புலம்பெயரும்.....

களமாடியவர்களில் முக்கால்வாசி களத்தில் பலியாகீற்றினம், மிஞ்சினதில கொஞ்சம் ஊனமாகி, படும்பாடு கண்கூடு.
இன்னும் கொஞ்சத்த வதைமுகாமில கொண்டிற்றாங்கள். மிச்சத்தில சொச்சத்த ஊசி அடிச்சு உருக்குலைச்சு நடைப்பிணமாய் அனுப்பிவிட்டு, சிலதுகளை அரசியல் ஆயுள் கைதிகள் ஆக்கியாச்சு.
இது இப்பிடியிருக்க, தேசியம் தேசியம் எண்டு ஊரிலிருந்து இப்ப கத்துறவ, சண்டைக்கு மற்றப்பக்கமும், இராணுவக் கட்டுப்பாட்டிலும் வாழ்ந்தவ தான்.
இப்படியென்று புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் பலரைப் பார்த்து சொன்னால்...
அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும்......

உங்களுக்கு என்ன தெரியும், நாம் பட்ட பாடுகளும், அவலங்களும். சாப்பாடு இல்லாமல், தண்ணி இல்லாமல், பிணங்கள் விழும் காட்சியோடு, முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த எங்களுக்குத் தான் தெரியும் என்று நீங்கள் கோபப்படுவீர்களா, இல்லையா ???

அதே கோபம் தான், பல புலம்பெயர் உறவுகளை பார்த்து முட்டாள்தனமாக நீங்கள் கேள்விகள் கேட்கும் போது அவர்களுக்கும் வரும்.
இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் ?
உல்லாசமாக வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு, நாம் முள்ளுக்கம்பி வேலிகளுக்குள்ளும், வதைமுகம்களுக்குள்ளும் இருக்கும்போது எங்கு சென்றீர்கள், இப்போ தேசியம் தேசியம் என்று பதிவுகள் போடுகின்றீர்கள் எனும் போது, புலம்பெயர் உறவுகள் எப்படிக் கோபப்படாமல் இருப்பார்கள் ????

இங்கே புரிதலின்மை விருட்சமாய் வளர்ந்து நிற்பதை உணரக்கூடியதாக உள்ளது.

வரலாறு தெரியாத புரிதல்.
நல்லாத்தானே வாழினம் என்னும் பார்வை.

இவை மாறாமல் ஈழத்தமிழர்களின் நிலை எப்போதும் மாறப்போவதில்லை.

தாயகத்தில் போராட்டம் நடந்த போது, அகதிகளாக வந்தோரும், சென்று பலம்சேருங்கள் என்று அனுப்பிவைக்கப் பட்டோரும் சேர்ந்த புலம்பெயர் கூட்டம், அங்கு போராட்டம் வலுவடைய, இங்கே தங்களை தேய்த்தார்கள், உறக்கம் மறந்து உழைத்தார்கள்.
போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது, அரசாங்கம் அமைத்து, ஒரு தனி நாடாகவே ஈழதேசம் எழுந்து நின்றது.
2008 வரைக்கும் புலம்பெயர் எந்தவொரு குறைகளும் விடாது கைகோர்த்து களமாட உரமாகியது.
ஆனால், தேசத்துரோகங்கள் அங்கே தான் வலுவாய் நடந்தது.
கிழக்கு உடைந்தது. நம்மவர்களில் சிலரே, "றோ" விற்கு கைப்பிள்ளைகள் ஆயினர். நியாயம், நேர்மையின் ஒற்றை உருவமான தேசத்தலைவன் தன் இனத்தாலேயே ஏமாற்றப் பட்டார். போராட்டம் மெளனிக்கப்பட்டது.

அதன் பின்னர் தான் ஓரிரு புலம்பெயர் நரிகள், சொத்து சுருட்டலில் ஈடுபட்டு, தேசத்தை மீள்கட்டமைப்பு செய்யும் பணம், சொத்துக்களுடன் துரோகம் செய்தனர்.

இந்தத் துரோகங்களுக்கு இடையே தான், தாயகத்தில் 
போராட்ட காலம் முழுவதும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து அத்தனை துன்பங்களும் கண்டு, முள்ளிவாய்க்கால் வரைக்கும் மூச்சைப் பிடித்தவர்களும், 
புலம்பெயர் தேசங்களில் பனியிலும், குளிரிலும், பல துன்பங்களுக்கு மத்தியிலும் தம்மை உருக்கி களத்திற்கு பலம் சேர்த்து, வீதி வீதியாக கோசங்கள் போட்டு, நாடு நாடாக கத்தி கத்தி தொண்டை வறண்ட பலரும் சிக்கித் தவிக்கின்றோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்வோம்.
எம் இனத்தில் துரோகிகளும், சுயநலவாதிகளும் தாயகத்திலும் இருந்தார்கள், இன்னமும் இருக்கின்றார்கள்.
அதைப்போலவே, புலம்பெயர் தேசத்திலும் இருந்தார்கள், இருக்கின்றார்கள். அவர்களின் தொகை சின்ன விழுக்காடு தான்.
அவர்களை இனம் கண்டு ஒதுக்கியோ, ஒதுங்கியோ செல்லாமல், ஒட்டுமொத்தமாக 
அங்குள்ளவர்கள் இங்குள்ளவர்களையும், இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களையும் காயப்படுத்திக்கொண்டே இருந்தால், இன்னமும் ஒரு ஒன்பது வருடங்கள் கழித்தும், எமக்கு ஒரு மாற்றமும் வரப்போவதில்லை.

எல்லோரும் கனவுகண்ட அந்த தேசம் இனி, அங்கிருந்து ஆரம்பிக்கும் சாத்தியம் எவ்வளவு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இனி, புலம்பெயர் போராட, தேசத்தில் உள்ளவர்கள் பலம் சேர்க்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் தலைவர்கள் அவசியமாக, அவசரமாக வேண்டும்.
கூட்டணி என்பது பெயரில் மட்டும் இருந்து யாருக்கு என்ன பலன் ????

இது இப்பிடியிருக்க, நம்மவர் சிலர் சீமான் தலையில் சீயக்காய் அரைப்பது தான் வேடிக்கை...

-ஐங்கரன்-