விந்தை உலகம் :

23 November 2017

kavijanillai@gmail.com

விந்தை உலகம் :
.............................

அங்கே......

கொச்சிக்கடை முடக்குக்கடை பாலப்பம்
கட்டைக்காடுக் கரையோர உப்புக்காற்று..
முல்லைத்தீவின் அம்மாச்சிகடை கீரைப்புட்டு
மாணிக்கம் ஜெகன் கடையில் கோழிக்கறி !!

வட்டுக்கோட்டை ஒத்தப்பனைக் கள்ளு
சிலாவத்தை சிறுமனையில் ஒடியற்கூழ்..
கிளிநொச்சி மக்கள்சந்தை நாவல்பழம்
சாய்ந்தமருது தெருவோர செவ்விளநீர் !!

திருகோணமலையில் கோயில் தீர்த்தம்
வல்வெட்டித்துறை மண்ணின் சிலிர்ப்பு..
யாழ்ப்பாணப் பேரூந்துத்தரிப்பிட திண்ணை
புங்குடுதீவு பூவரச நிழலில் இளைப்பாறல் !!

களமாடிய மாவீரரை நினைத்துக் கொண்டு
கடந்து செல்லும் இரணைமடுச் சந்திப்பு..
கரிகாலன் கனவுகளை இரைமீட்ட வண்ணம்
வலியுடன் கடக்கும் வட்டுவாகல் பாலம் !!

முயற்சி செய்தும் மறக்க முடியாத
முள்ளிவாய்க்கால்ப் பெருவெளி..
அடிக்கடி முணுமுணுக்க வைக்கும்
அழகான அந்தப் பனைமரம் பாடல் !!

இன்பமும் துன்பமும் சமமாக இருந்தும்
இன்றியமையாத ஈழவாழ்க்கை இன்றும்..
எத்தனை வெளிநாடுகள் போய் வரினும்
ஈடாகுமா எம்மண்ணிற்கு என்றும் ????

இங்கே.......

காலைப்பனியின் கடுமையான தாக்கம்
கண்விழிக்க விருப்பமின்றியே விடியல்..
மாலையோடு சேர்ந்தே இரவின் தழுவல்
மணிக்கணக்கிலேயே நாளின் முடிதல் !!

நாலு நிமிடக் குளிர் பட்டால் போதும்
நரம்புகள் பிரபுதேவாவாய் மாறும்...
நாற்பதாகி விட்டது வயதுனக்கென்று
நாகரிகமாகச் சொல்லுது உடல்மொழி !!

சாட்டுச் சொல்லி போர்வையில் நுழையலாம்
கிரடிட் கார்ட்டுக்காரனுக்கு என்ன சொல்வது..
வேலைக்கு லீவு கேட்க உள்மனம் ஏங்கும்
வாடகைப்பணம் ஞாபகத்தில் வந்து போகும் !!

ஊருக்குத் தான் இது வெளிநாட்டு வாழ்க்கை
உள்ள வந்து பார்த்தால் புரியும் நிலைமை...
அக்கரைக்கு இக்கரை அழகாகத் தெரியலாம்
அருகில் வந்து பார்த்தால் அவலம் புரியலாம் !!

இருந்தும் ஆறுதலாய்......

சுபபாலாவின் கவிதைகள் கொஞ்சம்
சூடாக்கிச் செல்லுது உள் மனசை....

புரட்சியின் புத்தக வெளியீட்டுப் பதிவுகள்
புத்துணர்ச்சி தருவதென்னவோ உண்மை...

முல்லேஸ்வரம் யோகேசின் நேரலைகள்
முந்தானையால் வருடும் தாயாகி நிற்குது....

கோகுலனின் பாடல்கள் கேட்க
கொடுத்து வைக்க வேண்டும்....

செந்தூரனின் மேடைக் கர்ஜனைகள்
செவிக்கு இதமாய்த்தான் இருக்கிறது...

ரதியக்காவும், மீராக்காவும், பாமினியக்காவும்
எழுதாமல் இருந்துவிட்டால் என் கதியென்ன..

யோகாவும் சிந்தனையும் கலந்தளிக்கும் தம்பி
பிரதீபனின் பதிவுகள் தனிசுகம் தான்....

எப்பிடித்தான் அரசியலில் குதித்தாளோ
என்மகள் ஈழநிலா இப்ப ரொம்ப பிசி....

கண்டதையும் எழுதித்தீர்த்த கடலோடியும்
கண்கலங்க எழுதுறான் இப்பெல்லாம்....

இன்னமும் ஏனடா புத்தகமாய் வரவில்லை
இணையில்லா ஈழநிலவன் கவிதைகள்....

மதிசுதாவின் குறும்படக் காட்சிப்படுத்தல்
தம்பிமார் இருவரின் மரணத்தையொட்டி
தாமதித்தாலும், அது தரமாக இருக்கும்....

யாழ் சபேசனும் , யாழ் அகத்தியனும்
அண்ணன் தம்பியா இருப்பாங்களோ ?
இருவரின் குறுங்கவிகளும் அசத்தல்....

ஆஞ்சலோவும் CV லக்‌ஷ்மனும் வேறுசிலரும்
ஆஸ்கார் வாங்கலாம் நிச்சயம் ஓர் நாள்...

பூவதி இப்பெல்லாம் புலம்பல்கள் இல்லை
புதுசு புதுசா முடிவெட்டுறதில கவனம்....

கூட்டாளி எடுத்தது வலிச்சுதோ இல்லையோ
அதை திரையிட நிரோஜன் படும்பாடு ????

இங்கிருந்தாலும், உலகில் எங்கிருந்தாலும்
ஈழத்தவர் படைப்புக்களை செப்பனிடும் சுகம்
ஏதோ வாழ்க்கையை கொண்டு செல்லுது....!

உணர்வுடன்..

-ஐங்கரன்-